விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

திருவாரூர்
விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கியதற்கு காரணமான தலைவருக்கு எங்கள் நன்றியை செலுத்துகிறோம்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று பரவலை தடுத்திடும் வகையிலும், நோய்த் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் அதிமுக்கிய கவனம் செலுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் பருவம் தவறிய மழை என மூன்று விதமான மழைகளால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளுக்கு தமிழக அரசின் சார்பில் உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உடனடியாக முழு நிவாரணத்தையும் வழங்க வேண்டும். இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் நெல் கொள்முதல் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டன. தற்போது சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைந்து கடந்த 15 தினங்களாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படவில்லை.
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்த போது பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உத்தரவுகள் மட்டும் போதாது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தேவையான தராசு, சாக்கு மூட்டைகள், சணல் கயிறுகள் மற்றும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதுகுறித்த நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் தற்போது வரை ஒரு லட்சம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் காத்திருப்பில் உள்ளன. எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நெல்லை கொள்முதல் செய்ய ஆன்லைன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது. ஏழை, எளிய விவசாயிகள் உடனடியாக நெல்லை விற்பனை செய்யும் வகையில் கொள்முதல் நிலையங்களில் எளிதான முறைகளை கையாள வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்கப்படாதது பொதுமக்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிசு தொகுப்பில் அறிவிக்கப்பட்ட பொருள்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.