8 மாத தி.மு.க. ஆட்சியில், ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் என்ன? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சேலம்,
எட்டு மாத தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் என்ன? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- டெல்லியில் குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு தமிழக ஊர்தி பங்கேற்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதே?
பதில்:- இதில் முறையாக மாநில அரசு மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்தி இருக்க வேண்டும். இந்த அரசு தவறிவிட்டது. இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே. முதலமைச்சர் காலையில் எழுந்திருக்கிறார். ஒரு நான்கைந்து இடங்களை பார்க்கிறார். டீ குடிக்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். வீட்டிற்கு செல்கிறார், வேறு என்ன சாதித்துள்ளார்? இந்த எட்டு மாத தி.மு.க. ஆட்சி காலத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்?
கழக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபொழுது போடப்பட்ட திட்டங்கள் முடிவுற்று அந்த முடிவுற்ற பணிகளை தான் தற்போது திறந்து வைத்து கொண்டிருக்கிறார். நான் முதலமைச்சராக இருந்த போது அம்மாவுடைய அரசில் போடப்பட்டு வெளியிடப்பட்ட அந்த அரசாணையின் படிதான் இன்றைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்? எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க ஊடகமும், பத்திரிகையும் தான் இந்த அரசை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறது.
கேள்வி:- அதிகப்படியான கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. அரசு தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?
பதில்:- கழக அரசில் தான் 75 கூட்டுக்குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொண்டு வந்து செய்தோம். உதாரணத்திற்கு எடப்பாடியில் நகரத்துக்கு 20 கோடி ரூபாயில் நிறைவேற்றி தங்கு தடையில்லாமல் 30 வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீரை கொடுத்து கொண்டு வந்துள்ளோம். அதேமாதிரி மேச்சேரி, நங்கவல்லி கூட்டு குடிநீர் திட்டத்தை அம்மாவுடைய ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த பொழுது கொண்டு வந்து தங்கு தடையில்லாமல் தற்போது வரை கொடுத்து கொண்டு வந்துள்ளோம்.
அதேபோல் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு எடப்பாடி, கொங்கணாபுரம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி கொண்டிருக்கிறோம். வீரபாண்டி சட்டமன்ற தொகுதியிலும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்தது கழக அரசு தான், தி.மு.க. அரசு இல்லை, பத்து ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சியிலும் இல்லை.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.