திருவள்ளூர்

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு வார்டு மறுவரைப்படி பிரிக்கப்பட்டது. அதன்படி 1-வது வார்டு பெரியகாவனம் வேதகிரி தெருவில் வசிக்கும் 424 வாக்காளர்களை அந்த வார்டில் இருந்து பிரித்து 2-வது வார்டில் இணைக்கப்பட்டனர்.

புதிய வார்டில் தங்களை இணைப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை நாங்கள் ஏற்க முடியாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் புகார் தெரிவித்திருந்தனர் வாக்காளர்கள்.

இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெரியகாவனம் வேதகிரி தெருவில் வசிக்கும் 424 வாக்காளர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்து 2-வது வார்டில் இணைக்க தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது பழைய முறைப்படி தங்களை 1-வது வார்டில் வாக்காளர்களாக மீண்டும் இணைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது அவர்கள் பழையபடி எங்களை 1-வது வார்டில் இணைக்காவிடில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறினர். அப்போது இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று நகராட்சி ஆணையர் தனலட்சுமி மற்றும் பொன்னேரி போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.