தற்போதைய செய்திகள்

முறைசாரா திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து கருத்தாய்வு கூட்டம் – சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது

சென்னை

வேலைவாய்ப்பிற்கான முறையான மற்றும் முறைசாரா திறன் மேம்பாட்டு பயிற்சி ( தொழில், தொழில்நுட்பம், கணிணி / டிஜிட்டல் ) குறித்த கருத்தாய்வுக்கூட்டம் காணொளி வாயிலான பங்கேற்பு முறையுடன் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னர் மாநிலத்திட்டக்குழு என்று அழைக்கப்பட்டது) துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நேற்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள மனித மேம்பாட்டு காணொளி அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர்-செயலர் அனில் மேஷ்ராம் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.இதில் வேலைவாய்ப்பிற்கான முறையான மற்றும் முறைசாரா திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. துணைத்தலைவர், மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலையின்மையை குறித்து பேசினார்.

மேலும் திறன் மேம்பாட்டுக் கல்வி அதற்கான வேலைவாய்ப்பினை அளித்திடுவதாக அமையும் போதுதான் முழுமையடையும் என்று தெரிவித்தார். வேளாண் சார்ந்த தொழில்களான ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றில் திறன் மேம்பாட்டினை அதிகரிப்பு செய்வதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உயர்த்திட முடியும் என மாநிலக் கொள்கை வளர்ச்சிக்குழுவின் உறுப்பினர் செயலர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இந்திய உணவு பதனிடுதல் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர், தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகம், ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனம் போன்றவற்றிலிருந்து தங்கள் கருத்துக்களையும், முன்னோடி கருத்துக்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.