நாகப்பட்டினம்

ஊத்தப்பம் கிடைக்காததால் ஓட்டல் ஊழியர்களை கத்தியால் குத்த முயற்சி – மயிலாடுதுறையில் தி.மு.க பிரமுகர் மகன் உள்பட 6 பேர் அட்டகாசம்

நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் உள்ள பிரபல உணவகத்தில் ஊத்தாப்பம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, திமுக ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மகன் உட்பட 6 இளைஞர்கள், ஓட்டல் ஊழியர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சித்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோட்டில் தனியார் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட வந்த ஆறு இளைஞர்கள் ஊத்தாப்பம் கேட்டுள்ளனர். ஊத்தாப்பம் இல்லை என்று உணவக ஊழியர்கள் கூறியதால் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து உணவக ஊழியர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமதுஅசரத் என்பவர், சிசிடிவி பதிவுகளுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தகராறு செய்தவர்கள் மயிலாடுதுறை அருகே மாப்படுகை திமுக ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்பையன் மகன் பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்தி, திவாகர், அருண் உள்ளிட்ட ஆறு நபர்கள் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.