குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா?4 நாட்களாக வனத்துறையினர் காத்திருப்பு

கோவை
கோவை குனியமுத்தூரில் பழைய குடோனுக்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து 4 நாட்களாக காத்திருக்கின்றனர்.
கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகர் மற்றும் பிள்ளையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில்
கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. மேலும் செந்தமிழ் நகர் தன்னாசியப்பன் கோயிலில் உள்ள பாறை மீது சிறுத்தை படுத்திருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்ததுடன் மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அந்த பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கும் நாய்களை அடித்து கொன்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
இதையடுத்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சுகுணாபுரம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 17-ந்தேதி கோவை மாவட்டம் குனியமுத்தூர் பி.கே.புதூர் அருகே உள்ள பழைய குடோனில் சிறுத்தை பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க குடோன் நுழைவு வாயிலில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 நாட்களாகியும் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காடடி வருகிறது.
இதனால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூன்று வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சிறுத்தையை பிடிக்க குடோனில் உள்ள ஆறு அறைகள், இரண்டு வழிகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.