தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

திண்டுக்கல்
குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு அதிருப்தியை சம்பாதித்து விட்டதால் தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏ.வெள்ளோட்டில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் கழக கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார்.
அதன்பின்னர் ஏ.வெள்ளோடு தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்து முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசியதாவது:-
தேர்தலின்போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழக மக்களின் கடும் அதிருப்தியை தி.மு.க. சம்பாதித்துள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். மீண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி அமையும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.