தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசால் மக்களுக்கு அவமானம்- எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை

டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசால் தமிழக மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

ராணிப்பேட்டையில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. நேர்மையான முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தால்
இதனை விசாரிக்க உத்தரவிட வேண்டும். பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாகவும் பல்வேறு ஊழல்கள் இருப்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

இதனால் மக்கள் மத்தியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எப்போதெல்லாம் பொதுமக்களுக்கு தி.மு.க. அரசின் மீது அதிருப்தி ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கழக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

ஸ்டாலின் துறையான செய்தித் துறையின் அலட்சியப் போக்கால் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொள்ள இருந்த ஊர்தி தேர்வாகவில்லை. இதனால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. அரசின் ஊழல்களை மூடி மறைப்பதற்காக தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆனால் மக்கள் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் படலமாக பார்க்கிறார்களே? தவிர வேறு எதுவும் இல்லை.

முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கிறேன். பொங்கல் பரிசு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்திலுள்ள 2 கோடியெ 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் சாட்சி சொல்ல தயாராக உள்ளார்கள். நீங்கள் சொல்லி கொண்டிருக்கிறீர்கள், நேர்மையான முதலமைச்சர் என்று. உண்மையாக நேர்மையான முதலமைச்சராக இருந்தால் அதற்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போலீசுக்கு அல்ல.

இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.