தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து புகார் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் பேட்டி

சென்னை

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து புகார் வந்தால் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கேள்வி : கொரோனா நோயாளிகளுக்கு உணவிற்காக ஒரு நாளைக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது? வேலூர் மாவட்டத்தில் ஒரு நோயாளிக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது?

பதில்: மொத்தமாக, ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 23 கோடி ரூபாய் செலவாகிக் கொண்டிருக்கிறது. அது மாவட்டங்களில், அந்தந்த இடங்களிலுள்ள விலை ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்றாற் போல மாறுகிறது.

கேள்வி : ரேஷன் கடைகளில் வழங்கப்படும் முகக்கவசங்கள் தரமற்றதாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே.

பதில்: இவையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில்தான் ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டு முறையாக அந்தத் துறை பரிசீலித்து சோதனை செய்துதான் பெற்றிருக்கிறார்கள். அப்படி ஏதாவது புகார் வந்தால் அதை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி : நதிகள் இணைப்பைப் பற்றி…

பதில்: நதிகள் இணைப்பை பொறுத்தவரை, தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். நதிகள் இணைப்புத் திட்டம் என்பது பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. மத்திய அரசிற்கு கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டுமென்று இரண்டு நாட்களுக்கு முன் ஜல்சக்தி துறை அமைச்சரோடு காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்களின் நிலவரத்தையெல்லாம் மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசு, பல்வேறு திட்டங்களில் உதவுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.