சிறப்பு செய்திகள்

விவசாயிகளை கசக்கிப்பிழியும் தி.மு.க.வினரை கட்டுப்படுத்துங்கள்-முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை

சென்னை, ஜூலை 9-

ஆளும் கட்சியினரின் அடாவடி செயல்களால் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விவசாயிகளை கசக்கிப்பிழியும் தி.மு.க.வினரை கட்டுப்படுத்துங்கள் என்று முதலமைச்சருக்கு அறிவுரை கூறி உள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 6.7.2021 அன்று மாலை திருவாரூர் செல்லும் வழியில், மன்னார்குடி அருகே செருமங்கலம் என்ற நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அங்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும், சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்ததாக செய்திகள் வந்தன.

அதே நேரம் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வருகின்றன. மேலும், தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே டோக்கன்களை வழங்குவதாகவும் விவசாயிகள், அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

குறிப்பாக, திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் பகுதிகளில், 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை கொள்முதல் செய்ய தங்கநகர், பி.மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய ஐந்து இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.

இங்கு பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ள நிலையில், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளுடன் நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதற்கிடையில், சமீபத்திய மழையினால் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதாகவும், குறிப்பாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 நெல் கொள்முதல் நிலையங்களில், சமீபத்திய மழையினால் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் பாழடைந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளது.

இதுபோல், பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும், ஆளும் கட்சியினரின் கருணைப்பார்வை இல்லாததால், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

கொள்முதலுக்கான டோக்கன் வழங்குவது சரிவர நடப்பதில்லை என்றும், பணம் பெற்றுக்கொண்டு ஆளும் கட்சியினர் சிபாரிசு செய்பவர்களிடம் இருந்து மட்டுமே நெல்லை அளக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுவதாக அப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆளும் கட்சியினரின் இதுபோன்ற அடாவடி செயல்களால் மக்களின் வயிற்றுப்பசி போக்கும் விவசாயிகள் தங்கள் வயிற்றுப்பசியைப் போக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை கசக்கிப்பிழியும் இடைத்தரகர்களை (தனது கட்சிக்காரர்களை) முதலமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்கொள்முதலை விரைவுபடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.