தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ேதால்வி அடைந்து விட்டது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன், அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது.

அந்த தோல்வியை மக்களிடம் இருந்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வின் இறுதி எதிரியான அ.தி.மு.க.வை அழிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு இந்த அரசு சோதனை நடத்துகிறது. அ.தி.மு.க.வை ஒருபோதும் அச்சுறுத்தவே அழிக்கவோ முடியாது. கே.பி.அன்பழகன் குடும்பம் பாரம்பரியமாக தொழில் செய்யும் குடும்பம். அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 8 மாதங்களில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை. அவர்கள் செய்த ஒரே திட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கியது மட்டுமே. அதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2.15 கோடி குடும்ப அட்டைக்கு 1159 கோடி ரூபாய்க்கு பொங்கல் தொகுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஒரு குடும்ப அட்டைக்கு 570 ரூபாய் ஆகிறது. ஆனால் அரசு வழங்கிய தொகுப்பின் சில்லரை விலையுடன் ஒப்பிடும் போது 300 ரூபாய் முதல் 350 ஆகிறது. அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 270 ரூபாய் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 270 ரூபாய் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் வந்த நிலையில் அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழல் முறைகேடுக்கு தி.மு.க. அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும்.

ஊழல் குறித்து பேசுவதற்கான எந்த தார்மீக உரிமையும் தி.மு.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் ஊழல், லஞ்சத்தை தொடங்கியதே தி.மு.க.வும், கருணாநதி தான். ஊழல் குற்றத்திற்காக தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு கலைத்ததை மறந்துவிட வேண்டாம்.

இவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ கூறினார்.

பேட்டியின் போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.