தற்போதைய செய்திகள்

3.12 லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடு,கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகள் வழங்கப்படும் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

திருப்பூர்

முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி நடப்பாண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 3.12 லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த 278 உறுப்பினர்களுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டிலான தானியங்கி பால் கொள்முதல் அலகு மற்றும் தீவன புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:-

மறைந்தும், மறையாமலும் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் கால்நடை பராமரிப்புத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் புரட்சிகரமான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயலாற்றி வருகிறார். குறிப்பாக, ஆசியா கண்டத்திலேயே இல்லாத வகையில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நமது மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.94.72 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்து அதற்கான நிதியினை ஒதுக்கி தந்துள்ள முதலமைச்சருக்கு திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், நடப்பாண்டு (2020-2021) மருத்துவக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடுமலைப்பேட்டை ,திருப்பூர் சாலை ஆர்.கே.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக் கட்டிடத்தில் வகுப்புகள் விரைவில் துவங்கப்படும். மேலும், நமது மாவட்டத்தில் அமையவுள்ள புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும்.

மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நடப்பாண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, சுமார் 3.12 லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது.

விவசாய வேளாண்பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் கோயமுத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து பிரித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கடந்த 17.12.2018 முதல் தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில், பால் உற்பத்தியினை பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் பெருங்குடி மக்களின் வளர்ச்சிக்காக அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு எல்லா வளமும், எல்லா நலமும் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக விழாவில், பால் மேம்பாடு குறித்த தேசிய திட்டத்தின் கீழ் 173 நபர்களுக்கு தலா ரூ.1,28,000 மதிப்பில் ரூ.2,21,44,000 மதிப்பீட்டிலான தானியங்கி பால் கொள்முதல் அலகு மற்றும் தேசிய கால்நடை பணிகள் திட்டத்தின் கீழ்105 நபர்களுக்கு தலா ரூ.23,000 மதிப்பில் ரூ.24,15,000 மதிப்பிலான தீவனம் நறுக்கும் கருவிகளையும் மற்றும் தேசிய கால்நடைகள் பணிகள் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான காப்பீடு அட்டையினையும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அதைத்தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற இலவச கால்நடை மருத்துவ முகாமினையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.