தமிழகம்

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதில் தமிழகம் முதலிடம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது:-

இந்த வைரஸ் நோய்ப்பரவலைத் தடுக்க, இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்கிற மாநிலம் தமிழ்நாடுதான். இதற்காக, அரசு, பலமுறை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்கள் மாவட்டங்களிலுள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும்பொழுது, அரசு அதற்கு தக்கவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், மருத்துவ வல்லுநர்களுடன் ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் அரசால் நடத்தப்பட்டு, அவர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி, இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றால் பலர் இறந்திருக்கிறார்கள். இந்த நோய் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் தொற்று அறிகுறி தென்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் இந்நோய் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது.

அதேபோல், நோய் தொற்று உள்ள இடங்களுக்கு நடமாடும் மருத்துவமனை மூலமாக நோய் தொற்று அறிகுறி தென்பட்டவர்களைக் கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள் போன்றவை கையிருப்பில் முழுமையாக உள்ளன. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இந்தியாவில், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கக்கூடிய மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு பெற்றுள்ளது. அதேபோல், அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்வதில் முதலிடம் வகிப்பதும், குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதும், இறப்பு சதவிகிதம் மிகக்குறைவாக உள்ளதும் தமிழ்நாட்டில் தான்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.