சிறப்பு செய்திகள்

விடியா தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கழகம் கடும் கண்டனம் – ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை

சென்னை

தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இல்லங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதற்கு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோர கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது விடியா தி.மு.க. அரசு. அரசியல் பழிவாங்கல் உன்பெயர் தி.மு.க.வா? ஏற்கனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய தி.மு.க., வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் சோதனை என்ற சட்ட ஈரலை இன்று நடத்தி கொண்டிருக்கிறது.

சாமானிய மக்கள் அரசை எதிர்த்து குரல் எழுப்பினால் வழக்குப் பதிவு, அதற்கும் ஒருபடி மேலே சென்று சமூக வலை தளங்களில் ஆளும் கட்சியினரை எதிர்த்துக் குரல் எழுப்பினால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம், ஆளுகின்ற ஆட்சியின் மீதும், அதிகாரிகள் மீதும் உண்மையான குற்றத்தை கண்டுபிடித்து அரசியல் களம் கண்ட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் ஆயுதத்தைத் தொடர்ந்து தி.மு.க. அரசு இயக்கி கொண்டிருக்கிறது.

மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் முனைப்பு காட்டாத விடியா தி.மு.க. அரசு, அரசியலில் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு வருகின்றபோது, அதனை மறைத்து அரசியல் சூழ்நிலைகளை திசை திருப்ப, தந்தையார் வழியில் தனயனும் முயற்சி செய்கிறார்.

இலவு காத்த கிளியாக 10 ஆண்டுகளாக சட்டமன்றத்திற்கு வெளியே முதலமைச்சர் நாற்காலிக்காக காத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அந்த இருக்கை கிடைத்த உடனே, எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம், என்னென்னவெல்லாம் கூப்பாடு போட்டோம், என்னென்னவெல்லாம் மக்களை திரட்டி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மக்களுக்கு பெரும் துயரத்தை கொடுத்தோம் என்பதையெல்லாம் மறந்து, இன்றைக்கு மக்கள் விரோத அரசை, விடியா அரசின் முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான, கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோவை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கே.சி.வீரமணி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.தங்கமணி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும், சோதனை முடிந்து வெளியே வரும்போது
லஞ்ச ஒழிப்புத்துறை மேற்சொன்ன இடங்களில் வெறுங்கையோடு தான் திரும்பி இருக்கிறது.

இன்றைக்கு, தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., தொடர்புடைய இல்லங்களில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சோதனையும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் ஏ.கோவிந்தசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டபோது,

சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க மறுத்த மாவட்ட ஆட்சியரைக் கண்டிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பிரச்சினையை எதிர்கொண்ட ஒரே காரணத்திற்காக, தருமபுரி மாவட்ட சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட தி.மு.க.விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்கவிடாமல் செய்த, சமரசம் இல்லா சமரன் அன்புச் சகோதரர் கே.பி. அன்பழகனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கை தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.

மக்களை ஏமாற்றி புறவாசல் வழியாக ஆட்சியில் அமர்ந்து 8 மாதங்கள் ஆகியும் இந்த விடியா தி.மு.க. அரசு, மக்களுக்கு பிரதானமாக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டாமல், ஏற்கெனவே அம்மாவின் அரசு
தமிழக அரசை முன்னணி மாநிலமாக பல துறைகளில் வைத்திருந்த அதே நிலைக்கு கேடு விளைவிக்கும் விதமாக உங்களின் ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக, தமிழகமெங்கும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்சித் தலைவர் வழி வந்து அவரின் பாசறையில் பயின்றவர்கள் நாங்கள். அஞ்சி பிழைக்கவும், அண்டி பிழைக்கவும், சுரண்டி பிழைக்கவும் எந்தவித தேவையும் எங்களுக்கு இல்லை. காரணம் இது, பல சோதனைகளையும், பல இயக்க பிளவுகளையும் கண்டு வென்ற மிகப்பெரிய ஆலமரம். இதை தி.மு.க. ஒருபோதும் சாய்த்துவிட முடியாது.

நீங்கள் நடத்தக்கூடிய ஒவ்வொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நாடகமும் எங்களுக்கும், எங்கள் இயக்க தலைவர்களுக்கும், இந்த இயக்கத்தை தாங்கி பிடித்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மேலும் வலுவும், உரமும் ஊட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. புரட்சித்தலைவரின் பாசறையிலும், புரட்சித்தலைவி அம்மாவின் பள்ளியிலும் ஒழுக்கமான கல்வியை பயின்றவர்கள் நாங்கள். தேசத்தின் நலனும், தமிழகத்தின் வளர்ச்சியும் மட்டுமே எங்களுக்கு பிரதானம் என்று எண்ணி எங்களுடைய அரசியல் பயணத்தை தொடர்வோம்.

ஆட்சிக் கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியை பங்குபெற வைக்க முடியாத விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னுடைய நிர்வாக திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

விடியா தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு, எங்களது
கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.