தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கழகம் தயார் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கழகம் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் ஜெ.ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொல்லியல் நகரமான மதுரையை வளர்ந்த நகரமாக மாற்ற முயற்சி எடுத்தது கழகம் அரசு. ரூ.1000 கோடியில் மதுரை மாநகரில் ஸ்மார்ட் திட்ட பணிகள், ரூ.1296 கோடியில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.170 கோடியில் பெரியார் பேருந்து சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

வைகை கரை ஓரங்களில் பூங்காக்களுடன் கூடிய சாலைகள், குடிநீர் ஆதாரத்தை பெருக்க மாடக்குளம் கண்மாய், நிலையூர் கண்மாய், துவரிமான், மீனாட்சிபுரம் போன்ற பல்வேறு கண்மாய்கள், பனையூர் வாய்க்கால் சீரமைக்கப்பட்டுள்ளது. நத்தம் சாலையில் ரூ.1000 கோடியில் பறக்கும் பாலங்கள், மூன்றுமாவடி ஆனையூர் இடையே ரூ.50 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க திட்டம் வகுக்கப்பட்டு தற்போது மூன்று ஆண்டுகளாக தண்ணீர் நிறைந்து உள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டி உள்ளோம். அதேபோல் கோரிப்பாளையம் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. சிலர் நீதிமன்றம் சென்றுள்ளதால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மதுரை மாநகருக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கழக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போது முதல்வர் திறந்து வைத்துள்ளார். முதல்வர் அறிவித்த மேலக்கால் சாலையை அகலப்படுத்துவற்கு பதில் வைகை ஆற்றின் கரையோரம் சாலையை சீரமைக்கலாம்.

முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மதுரையில் முறையாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவில்லை. மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

மதுரைக்கு முதல்வர் அறிவித்த ரூ.500 கோடி திட்டங்களுக்கு நிதி எப்படி பெறப்படுகிறது என விளக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்களை கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை அறிவிக்க வேண்டும். வெளியான அறிவிப்பு அறிவிப்பாக இருக்கக்கூடாது.

மக்கள் எங்கள் பக்கம், நாங்கள் மக்கள் பக்கம். மக்கள் தான் எல்லாமும். அர்கள் தான் எஜமானார்கள். பெண்களை மையப்படுத்தி கழக அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க கழகம் தயாராக உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.