தற்போதைய செய்திகள்

வாக்களித்த மக்களை பற்றி தி.மு.க.வுக்கு கவலை இல்லை-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கடும் தாக்கு

காஞ்சிபுரம்,

வாக்களித்த மக்களை பற்றி துளிகூட தி.மு.க.வுக்கு கவலை இல்லை என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நல்ல பல திட்டங்களை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கக் கூடிய இயக்கமாக கழகம் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் தி.மு.க.வுக்கு எதிராக உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதி எதையும் இதுவரை விடியா தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. ஒரு சில பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என அறிவித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் தான் வாக்களித்துள்ளனர். பெண்களுக்கு மட்டும் இலவச பேருந்து என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

கழகம் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பண்டிகைக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ரூ.5000 கொடுக்க வேண்டும் என கூறினார்.

ஆனால் இந்த பொங்கலுக்கு ஏழை மக்களுக்கு 500 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனை. கழக ஆட்சியில் சொன்ன அனைத்து திட்டங்களையும் செய்து முடித்திருக்கிறோம்.

தற்போது தி.மு.க.வினர் கொள்ளை அடிப்பதிலையே குறியாக உள்ளனர். மக்களை பற்றி துளி கூட யோசிக்காமல் இருப்பதால் தான் தி.மு.க.வால் ஒரு திட்டத்தை கூட இதுவரை நிறைவேற்ற முடியவில்லை. கழக ஆட்சியில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கச்சேரி செய்யாற்று பாலம் பலத்த மழையின் காரணமாக சேதமடைந்தது.

நான்கே நாட்களில் பாலத்தை சரிசெய்து வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நவம்பர் மாதம் பெய்த கனமழையால் வெங்கச்சேரி செய்யாற்று பாலமும், வாலாஜாபாத் பாலாற்று பாலமும் சேதமடைந்து 2 மாதங்களாகியும் இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதுதான் விடியா அரசின் சாதனை. அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உத்திரமேரூர் பேரூராட்சியை நாம் கைப்பற்ற வேண்டும். அனைத்து வார்டுகளிலும் நாம் வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினார்.