தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சதியை முறியடிப்போம் – மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் சதியை முறியடிப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மேலூர் நகராட்சி, வெள்ளாளப்பட்டி பேரூராட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த கழக நிர்வாகியிடம் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேர்காணல் நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்பலம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பி.எஸ்.துரைப்பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் பொன் ராஜேந்திரன், யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் பாஸ்கரன், பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், முன்னாள் சேர்மன் உமாபதி மற்றும் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யாமல் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் சோதனை என்ற பெயரில் மக்கள் விரோத செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

தற்போது ரூ.1297 கோடியில் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்கள். ஆனால் அதில் ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளனர். மக்களுக்கு பொருட்கள் வழங்காமல் 1000 ரூபாய் வழங்கி இருக்கலாம். ஆனால் வழங்க மனமில்லை. ஏனென்றால் அதன்மூலம் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்ற கோணத்தில் செயல்பட்டுள்ளனர்.

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. மேலூர் நகராட்சியில் 27 வார்டுகளும், வெள்ளாளப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளும் உள்ளன. இந்த வார்டுகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு இன்று முதல் நீங்கள் அனைவரும் களப்பணி ஆற்ற வேண்டும்.

குறிப்பாக 8 மாத தி.மு.க. ஆட்சியின் அவலத்தை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு நாம் செய்த சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். இதை செய்தாலே நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம். குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் பல்வேறு முறைகேடுகளை செய்வார்கள். எனவே நீங்கள் விழிப்புடன் செயல்பட்டு தி.மு.க.வின் சதிகளை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசினார்.