அம்மா மினி கிளினிக்கை காலி செய்ய எடப்பாடி அருகே மக்கள் கடும் எதிர்ப்பு – மருத்துவ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்

சேலம்
எடப்பாடி அருகே அம்மா மினி கிளினிக்கை காலி செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொருட்களை ஏற்றி சென்ற மருத்துவ அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பொன்னம்பாளையத்தில் கடந்த கழக ஆட்சியின் போது அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க.
ஆட்சி வந்தவுடன் அம்மா மினி கிளினிக் திறக்கப்படவில்லை. இந்நிலையில் குள்ளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பொன்னம்பாளையத்தில் இனி அம்மா மினி கிளினிக் செயல்படாது எனவும், அங்குள்ள மருத்துவ உபகரணங்களை எடுத்து செல்வதாக தகவல் பரவியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அம்மா மினி கிளினிக்கை காலி செய்து விட்டு பொருட்களை எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்தனர்.
அப்போது பொதுமக்களுக்கும், மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் மேலதிகாரிகளின் உத்தரவுப்படி மருத்துவ உபகரணங்களை எடுத்துச்செல்வதாக மருத்துவர்கள் கூறியதோடு அம்மா மினி கிளினிக்கை காலி செய்து விட்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் இந்த அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டபோது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது . தற்போது இங்கு மினி கிளினிக் இல்லை. ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இந்த பொன்னம்பாளையத்திலேயே மருத்துவ சேவையை தொடர்ந்து செயல்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.