தற்போதைய செய்திகள்

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்: வெற்றி சரித்திரம் படைப்போம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்

தருமபுரி

வரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி சரித்திரம் படைப்போம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் திறப்பு விழா தருமபுரியில் உள்ள மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். வேலூர் மண்டல இணை செயலாளர் பிரபு வரவேற்று பேசினார். உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஸ்குமார் ஆகியோர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- 

எதிலும் தனிப்பட்ட முறையில் வெற்றிபெற முடியாது. தனிப்பட்ட என்னால் எதுவும் செய்ய முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். இம்மாவட்டத்தில் எந்தப் பணியை கொடுத்தாலும் இருக்கின்ற அத்தனை பொறுப்பாளர்களும் இணைந்து பணியாற்றி அதன்மூலம் கிடைத்த வெற்றிதான் நமக்கு பாராட்டு கிடைத்துள்ளது.

முதன்முதலாக அம்மா அவர்கள் எனக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கிய பிறகு அம்மா அவர்கள் அன்றைய தினம் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட கட்சி அலுவலகம் கட்ட வேண்டும் என்று கூறினார். ஆனால் அன்றையதினம் இடத்தை வாங்கி மாவட்ட கட்சி அலுவலகம் கட்டியவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒன்று தருமபுரி மாவட்டம். மற்றொன்று விழுப்புரம் மாவட்டம்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடியார் இன்று வியக்கத்தக்க வகையில் ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிண்ற முதல்வராக திகழ்ந்து வருகிறார். இதற்காக இன்றைக்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கொண்டு இருக்கிறது.

உங்களில் ஏதாவது மனக்குமுறல் மனக்குறை இருந்தால் என்னிடம் நேரடியாக முறையிடலாம். நமது இயக்கத்தில் 15 சார்பு அமைப்புகள் இருக்கின்றன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் புதிய அலுவலகம் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன மனத்தாங்கல் வந்தால் நீங்கள் கோபப்படக்கூடாது. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் உள்ளவர்கள் எல்லாம் நீங்கள் இளம் வயதை உடையவர்கள். இந்த வயதில் நீங்கள் எதற்கும் கோபப்படக்கூடாது. இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவில் 734 பேர் இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது கண்டிப்பாக உங்களின் உதவியோடு 5 தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது.

யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அது என்ன ஆகும் என்று யாராலும் சொல்ல முடியாது. அது மக்களுடைய தீர்ப்பு. கழகத்தில் நாம் இருப்பது நமக்கு மிகவும் பெருமை. தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் முழுமையாக அர்ப்பணித்து பாடுபட வேண்டும். திமுக.வின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.