தற்போதைய செய்திகள்

அடுத்த 8 மாதங்களில் நாம் அனைவரும் புதுமையான மதுரை மாநகரை பார்க்க உள்ளோம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

மதுரை

அடுத்த 8 மாதங்களில் நாம் அனைவரும் புதுமையான மதுரை மாநகரை பார்க்க உள்ளோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றிங்கரையை மேம்படுத்துதல் மற்றும் தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் கட்டுமான பணிகளை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

மதுரை மாநகரை அழகுப்படுத்தி பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வைகையை காப்பாற்றும் வகையிலும் தூய்மையான வைகையை உருவாக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலும் அம்மா அவர்களின் ஆணையின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வைகை ஆற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரைக்கு அள்ளி அள்ளி கொடுக்கின்ற அரசு அம்மாவின் அரசு. வைகையை சீரமைக்கும் பணிக்கு மட்டும் ஏறத்தாழ ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் காமராஜர் பாலம் முதல் ராஜா மில் பாலம் வரை 2 கிலோ மீட்டர், அதேபோல் குருவிக்காரன் சாலை முதல் விரகனூர் சாலை வரை 3 கிலோ மீட்டர் ஒரு பக்கத்திற்கு 5 கிலோ மீட்டர் இரண்டு பக்கமும் 10 கிலோ மீட்டருக்கு இரு வழிச்சாலையாக கனரக வாகனங்கள், சிறிய வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வருவதற்கு ஏதுவாக மாற்றப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ரூ.303.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதுதவிர வைகை ஆற்று கரையோரங்களில் தடுப்புச்சுவர், மழைநீர் வடிகால், நடைபாதை மற்றும் 10 இடங்களில் படித்துறை அமைக்கப்பட்டு வருகிறது.

பண்டைக்காலத்தில் திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட படித்துறைகள் பழமை மாறாமல் இருப்பதற்கு தற்போதும் அமைக்கப்பட்டு வருகிறது. தடுப்புச்சுவர் கட்டும் பணி 8200 மீட்டர் அளவிற்கு இதுவரைக்கும் முடிக்கப்பட்டுள்ளது. இதர பணிகள் வருகிற 2021க்குள் முடிக்கப்படும்.

மதுரை மாநகராட்சியில் 3 கி.மீ. தென்பகுதி 3 கி.மீ. வடபகுதி ஆக 6 கி.மீ அளவிற்கு இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு புதிய தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் இருபக்கமும் 8, 8 கி.மீட்டர் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜா மில் சாலை முதல் குருவிக்காரன் சாலை வரை 3 கி.மீ. இரண்டு பக்கமும் உயர்த்தப்பட்டு இரு கரைகளிலும் பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் 6 இடங்களில் கழிப்பறை அமைத்து அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு அழகுப்படுத்தப்பட உள்ளது.

இந்த பணிக்காக ரூ.60.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்புச்சுவர் கட்டும் பணி 3200 கி.மீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. இதர பணிகள் வரும் மார்ச் 2021க்குள் பணிகள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வைகை ஆற்றின் குறுக்கே ஒபுளாபடித்துறை மற்றும் ஏ.வி.பாலம் ஆகிய இரண்டு இடங்களில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு இதன் மூலம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு எப்பொழுது எல்லாம் வைகை ஆற்றில் தண்ணீர் வந்தாலும் அப்பொழுது எல்லாம் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் தற்போது கலாச்சார மையம் கட்டப்பட்டு வருகிறது. 1670-ல் ராணி மங்கம்மாள் ஆட்சியின் போது காந்தி மியூசியம் அரண்மனையாக இருந்தது. அப்போது வீர விளையாட்டுகள் நடைபெறும் இடமாக தமுக்கம் மைதானம் இருந்தது. 1959ல் இந்த அரண்மனை காந்தி மியூசியமாக மாற்றப்பட்டது. 1981-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது உலக தமிழ்நாடு இந்த தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

1982ல் பாரதி நூற்றாண்டு விழாவும் இங்கு நடைபெற்றது. ஆண்டு தோறும் சித்திரை பொருட்காட்சி, புத்தகக் கண்காட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு கூட மிகப்பெரிய ஆதரவாக இந்த தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று கூடி மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கிய இடமாக திகழ்ந்தது, 58 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த சங்கராதாஸ் சுவாமி கலையரங்கத்தை மாற்றி தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.45.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இம்மையத்தின் சிறப்பு ஒரே நேரத்தில் 3500 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

தடைமட்டத்திற்கு கீழ் உள்ள தளத்தில் 250 எண்ணம் நான்கு சக்கர மற்றும் 215 எண்ணம் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் வருகிற மார்ச் 2021-ம் ஆண்டிற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மதுரைக்கு பல்வேறு திட்டங்களை அள்ளி அள்ளி வழங்கி உள்ளார். 100 ஆண்டுகளில் செய்யக்கூடிய பணிகளை கடந்த 4 ஆண்டுகளில் வழங்கிய முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் எடப்பாடியார். குறிப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி அந்த விழா மூலமாக பல ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை அறிவித்தும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூ.1460 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு எங்கு பார்த்தாலும் நீர்நிலைகள் நிறைந்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அத்திகடவு அவினாசி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டத்திற்கு காவிரி குண்டாறு இணைப்புத்திட்டம், விவசாயிகளை பாதுகாக்க பாதுகாப்பு வேளாண் மண்டலம் இத்தனை திட்டங்களை கொண்டு வந்தவர் ஏழை பங்காளன், விவசாயிகளின் தோழன் முதலமைச்சர்.

அடுத்த 8 மாதங்களில் புதுமையான மதுரை மாநகரை நாம் அனைவரும் பார்க்க உள்ளோம். மதுரையை 2வது தலைநகரமாக கொண்டு வருவது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கூறியதற்கு நான் வழிமொழிந்துள்ளேன். முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பெரும் தலைவர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து முடிவை எடுப்பார்கள்.

மதுரை மாவட்டத்திற்கு அடுத்த 60 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனையே இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்கு ரூ.1200 கோடி மதிப்பீட்டில் ஒரு சாதனையை கொண்டு வந்தவர் முதலமைச்சர் ஆவார். 82 இடங்களில் உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும் 7 நாட்களும் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்திற்கு தேவையான 56 லட்சம் முகக்கவசங்களில் வரப்பெற்றது 21 லட்சம் முகக்கவசங்கள் அவற்றில் பரிசோதனை செய்யப் பட்டு 16 லட்சம் முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முகக் கவசங்கள் வரவர பரிசோதனை செய்யப்பட்டே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முன்னதாக காளவாசல் கொன்னவாய் சாலையில் இருந்து வைகை ஆற்று வடகரை பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும், செல்லூரில் கட்டப்பட்டு வரும் படித்துறை பணிகளையும், ஆழ்வார்புரம் கள்ளழகர் இறங்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சறுக்குபாலத்தையும், ஓபுளாபடித்துறையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளையும் மேலும் வைகை வடகரை பகுதியில் சாலையோர பூங்காக்கள் அமைப்பது தொடர்பாகவும் பந்தல்குடி வாய்க்காலில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆணையாளர் ச.விசாகன், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் சேகர், பி.எஸ்.மணியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஜெ.ராஜா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் மனோகரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.