சிறப்பு செய்திகள்

தமிழகத்தின் 2ம் தலைநகர் அரசின் கருத்தல்ல – முதலமைச்சர் பேட்டி

சென்னை

தமிழகத்தின் 2ம் தலைநகர் கருத்து அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி – தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவேரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்படுமா…

பதில் – அந்த திட்டம் அரசின் ஆய்வில் இருக்கிறது. ஏன் என்றால், உயரம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலே, ஆய்வு செய்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

கேள்வி – இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சு இப்போது அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றி அரசின் நிலைப்பாடு என்ன?

பதில் – அது அவருடைய கருத்து. அது அரசினுடைய கருத்து அல்ல.

கேள்வி – ஆந்திர பிரதேசத்தில் அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் செயல்படுத்தப்படுமா?

பதில் – அம்மாவுடைய அரசு, கொரோனா காலத்திலும் கூட புதிய புதிய தொழில்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து, இந்த கொரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இன்றைக்கு சிறுதொழில்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.

உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். அந்தப் பணிகள் எல்லாம் நடைபெற்று கொண்டிருக்கின்றன. புதிய தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகின்றோம், அடிக்கல் நாட்டுகின்றோம். அதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கேள்வி – வத்தல் மலை சுற்றுலா தலமாக அமைக்கப்படுமா…

பதில் – அது அரசினுடைய பரிசீலனையில் இருந்து கொண்டு இருக்கிறது. படிப்படியாக ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றப்படும்.

கேள்வி – தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கைக்கு எதிராக உள்ள நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் இந்தி மூன்றாவது பாடமாக எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டுள்ளதே…

பதில் – இது தவறான செய்தி. இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துவிட்டார். அந்த Format தவறானது. போலி Format யை வெளியிட்டு தவறான, அவதூறான செய்தியை பரப்பி இருக்கிறார்கள். அவ்வாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி – தருமபுரி மாவட்டத்தில் மலர் சாகுபடி அதிகமாக இருக்கிறது. அரசு போக்குவரத்திற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தாலும், சந்தை வாய்ப்புகள் இல்லாததால் தோட்டத்திலே மலர்கள் கருகும் நிலை உள்ளது. மலர் சாகுபடிக்கு கர்நாடக அரசு வழங்கியதை போல தமிழ்நாடு அரசால் நிவாரணம் ஏதாவது வழங்கப்படுமா?

பதில் – தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் நம்முடைய வேளாண் பெருமக்கள் அதிகளவில் மலர் சாகுபடி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் சர்வதேச மலர் ஏல மையத்தை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சுமார் 20 கோடி ரூபாயில் இந்த திட்டம் துவங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்கின்ற மலர்களை அங்கே சென்று விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம்.

கொரோனா வைரஸ் தொற்றால் விவசாயிகள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தான் அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம். அதேபோல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்தோம். இப்படி எல்லா வகையிலும் அரசு உதவி செய்து வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.