தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு- கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

சென்னை,
தஞ்சையில் கழகத்தின் நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சாலை சந்திப்பில் 4 அடி உயர பீடத்தில் 2 அடி உயரத்தில் சிமெண்ட்டால் கழகத்தின் நிறவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே ஒரு டீக்கடை உள்ளது. அதன் உரிமையாளர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது எம்.ஜி.ஆர். சிலை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்த கரந்தை பகுதி கழக செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, 8-வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அருகில் இருந்த தள்ளுவண்டி அருகே எம்.ஜி.ஆர். சிலை தனியாக உடைக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கழக நிர்வாகிகள் தஞ்சை மேற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டதற்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள கழகத்தின் நிறுவனரும்,முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சிலை நேற்று இரவு சில மர்ம நபர்களால் முற்றிலுமாக தகர்த்தப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்ற விஷம செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்துஅவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்,இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் இத்தகைய விஷம செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைசச்ருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஏழைகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்றிய வள்ளல், கழக நிறுவனர், பாரத ரத்னா, புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை தஞ்சாவூர் வடக்கு வீதியில் சேதப்படுத்தப்பட்டுள்ளதற்கு எனது வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக, புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கையும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.