தற்போதைய செய்திகள்

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் புதுக்கோட்டை மாணவர் முதலிடம் – முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து

புதுக்கோட்டை

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முதலிடம் பிடித்துள்ள புதுக்கோட்டை மாணவருக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கழக அரசால் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பு சேர்க்கையில் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியை சேர்ந்த சிவா என்ற மாணவர் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்துள்ளதை அறிந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உடனடியாக அந்த மாணவரை நேரில் அழைத்து, பூங்கொத்து கொடுத்து, அவரது பெற்றோர், ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் அந்த மாணவருக்கு உதவித்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கழக அரசால் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர் சிவா தமிழகத்திலேயே முதல் இடத்தை பெற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக கழக ஆட்சியில் தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த பெருமை முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியையே சேரும்.

இதேபோன்று கடந்த ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி 423 மாணவர்கள் தற்போது மருத்துவம் படித்து வருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு கழக அரசால் கொண்டு வரப்பட்ட புதிய 11 மருத்துவ கல்லூரிகள் மூலமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி 533 மாணவர்களுக்கு மேல் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேருவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது 7.5 சதவீத இடஒதுக்கீடு தான். அந்த பெருமையும் கழக அரசையே சேரும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.