தற்போதைய செய்திகள்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த கழகத்துக்கு மட்டுமே தகுதி உண்டு – வி.வி.ராஜன் செல்லப்பா முழக்கம்

மதுரை

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவண்ணம் செலுத்தும் தகுதி கழகத்துக்கு மட்டுமே உண்டு என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.பி.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மொழிப்போர் தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன் திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மற்றும் ஒன்றிய கழக செயளாலர்கள், பொன்.ராஜேந்திரன், கே.பொன்னுசாமி, குலோத்துங்கன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி கழக செயலாளர்கள் வண்டியூர் செந்தில்குமார், அவனியாபுரம் முருகேசன், கே.பி.சரவணன், கவுரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தி திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மாபெரும் புரட்சி ஏற்பட்டது. தமிழ் உணர்வாளர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். பேறிஞர் அண்ணா காலத்தில் மாணவர்கள் போராடினர். அதன் தாக்கம் தான் 1967-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசை அப்புறப்படுத்தி அண்ணாவை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்கினர்.

இன்றைக்கு தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து உள்ளது. ஆனால் காங்கிரசின் இந்தி திணிப்பு குறித்து தி.மு.க. சாட முடியாது. கழகத்துக்கு அந்த உரிமை உள்ளது. அதுமட்டுமல்லாது மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை போற்றும் வண்ணம் புரட்சித்தலைவர் காலத்தில் கோவை மற்றும் சிதம்பரத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது தொடர்ந்து ஆண்டு தோறும் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலையில் உள்ள மைல்கல்லில் தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டு இந்தி பொறிக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதனை எதிர்த்ததை தொடர்ந்து அது வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் தி.மு.க. மொழிப்போர் தியாகிகள் நலனை எண்ணி பார்க்காமல் இருந்துள்ளது. ஆகவே மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த கழகத்துக்கு மட்டுமே தகுதி உண்டு.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.