தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

மக்களுக்கு தி.மு.க. மீது கோபமும், எங்கள் மீது பாசமும் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயபுரத்தில் நேற்று மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படங்களுக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

1965-ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் இருந்து கொண்டு இந்தி மொழியை கட்டாயப்படுத்திய காரணத்தினால், இன்றும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளாத கட்சியாக உள்ளது. எதையும் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது. எங்கள் கட்சி இரு மொழி கொள்கைப்படி செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. ஏன், பொங்கல் பரிசு தரமானதாக இல்லை. அரிசியில் வண்டு, பல்லி விழுந்த புளி, உருகிய வெல்லம் என அனைத்திலும் கலப்படம். இதுதான் பொங்கல் பரிசா? பொங்கல் பரிசு என்ற போர்வையில் மக்களுக்கு குப்பையை கொடுத்துள்ளார்கள்.

இந்த சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால் பயத்தினால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறுகிறார். தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியினர் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? ஆட்சி என்றால் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதற்கு அஞ்சும் இயக்கம் கழகம் இல்லை. அஞ்ச மாட்டோம். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை கழகம் பெறும்.

8 மாதத்தில் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைத்துள்ளது. சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. காவல்துறை தி.மு.க.வின் ஏவல்துறையாக உள்ளது. பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சட்டமன்ற தேர்தல் இன்று வந்தால் கூட கழகம் மகத்தான வெற்றி பெறும். மக்களுக்கு தி.மு.க. மேல் கோபம். எங்கள் மீது பாசம் உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.