கோவை கிறிஸ்தவ ஆலயத்தில் செபஸ்தியார் சிலை உடைப்பு

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
கோவை,
கோவை ராமநாதபுரத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்து செபஸ்தியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் கேரள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான ஹோலி டிரினிட்டி கதீட்ரல் ஆலயம் உள்ளது. அதன் நுழைவு வாயிலில் இருந்த கெபி மற்றும் அதில் இருந்த செபஸ்தியார் சிலையையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
இத்தகவல் அறிந்த கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுத்தினார். இதன்பின்னர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில் கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பழமையான ஹோலி டிரினிட்டி கதீட்ரல் ஆலயத்திற்குள் சமூக விரோதிகள் நுழைந்து அங்குள்ள செபஸ்தியார் சிலையை உடைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோவை மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வை எப்போதும் அனுமதிக்க முடியாது.
அமைதியாக உள்ள கோவையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் யாரோ திட்டமிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வு இங்கு நடக்கவில்லை.
ஆகவே சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூகம் மற்றும் மத மோதல்களை தூண்டும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.