தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித்துறையும், வருவாய்த்துறையும் முதலிடத்தில் இருக்கிறது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

மக்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் உள்ளாட்சித்துறையும், வருவாய்த்துறையும் முதலிடத்தில் இருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் ஆய்வுக்கூட்டங்களில் எடுத்துரைத்த அறிவுரைகளான, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் என்று பல்வேறு நிலையிலுள்ள திட்டங்களை முழுமையாக நிறைவடைய செய்ய வேண்டும். முடிவுற்ற பணிகளை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புதிய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

முதலமைச்சரால் காணொலிக்காட்சி மூலமாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டாலும், நேரிலே அலுவலர்களைச் சந்தித்து, தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, விவசாயிகளை சந்தித்து மாவட்டங்களுடைய வளர்ச்சிக்காக பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த பொழுது மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்துத்துறை ஊழியர்களை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் உள்ளாட்சித்துறையும், வருவாய்த்துறையும் முதலிடத்தில் இருக்கிறது. இவர்கள் தினந்தோறும் மக்களை சந்திக்கின்றனர்.

குடிமராமத்து திட்டமானது முதலமைச்சர் கனவுத்திட்டமாகும். உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊரனிகள், கண்மாய்கள், கால்வாய்களை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் தான் கொரோனா காலத்தில் அதிக மருத்துவர்கள் விடுப்பின்றி பணியாற்றினார்கள். கோவிட் கேர் சென்டர்களை சிறப்பாக அமைத்த மாவட்ட ஆட்சித்தலைவரையும், கூடுதல் ஆட்சியரையும் முதலமைச்சர் பாராட்டினார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.