திருப்பூர்

அரசின் சாதனைகளை விளக்கி கூறி கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் – மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் சூளுரை

திருப்பூர்

அரசின் சாதனைகளை விளக்கி கூறி கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் சூளுரைத்தார்.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பி.கே.ராஜ் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் டி.டி.காமராஜ் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்தியபாமா பொன்னுசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் சின்னப்பன்(எ) பழனிசாமி, வி.பி.பெரியசாமி, பி.செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி கழகத்தை மிகப்பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதல்வரும், துணை முதல்வரும் கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காத்து சிறப்பாக செயல்படுகின்றனர். நமக்குள் எந்த சங்கடங்களும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கு கட்டாயம் கட்சியில் பதவி கிடைக்கும். ஒவ்வொரு தொண்டனும் உழைத்தால் தான் நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்.

கழக அரசு சிறப்பான முறையில் செயல்படுவதால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதால் பல விருதுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறது. இதனை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். கொரோனா காலத்திலும் முதலமைச்சரே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று ஆய்வு செய்து தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

ஏழை எளிய அரசு பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவர்களது படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இப்படி எண்ணற்ற பல நல்ல திட்டங்களை தந்து அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். கழக அரசின் திட்டங்களை மற்றும் சாதனைகளை குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

இவ்வாறு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் பேசினார்.