தற்போதைய செய்திகள்

ஊட்டச்சத்து உணவை எடுத்துக்கொண்டு முதியோர்கள், கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் – அமைச்சர் நிலோபர்கபீல் வேண்டுகோள்

திருப்பத்தூர்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் முதியோர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் அறிவுறுத்தி உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் மூலம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் வட்டாரப்பகுதிகளில் உள்ள 181 ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டசத்து மாவு மற்றும் ரத்தசோகை குறைபாடு கண்டறிப்பட்ட 21 கர்ப்பிணி தாய்மார்களுக்கு செறிவுட்டப்பட்ட உப்பு பொட்டலங்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கருவில் உள்ள குழந்தை முதல் முதியர்வர்கள் வரை பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் செயல்படுத்தி உள்ளார்கள். அந்த திட்டங்கள் எல்லாம் தற்போது வரை தொடர்ந்து முதலமைச்சரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்களின் கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிந்து மருந்து மாத்திரைகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கி வருகின்றது.

தாயும், சேயும் நலமுடனும் ஆரோக்கிய இருக்க அம்மா ஆரோக்கிய திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தியுள்ளார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டசத்து உணவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்குகிறார்கள். அங்கன்வாடியில் ஊட்டசத்து உணவுகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவவைகளை குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடுகளை களையும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் காலத்தில் இரத்தசோகை குறைபாடு உள்ள ஏழை எளிய கர்பிணி தாய்மார்களை கண்டறிந்து அவர்களுக்கு செறிவூட்டப்பட்ட உப்புகளை வழங்கி வருகின்றது. அதேபோல ஆதரவற்ற தாய்மார்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத நிலையில் அவர்களின் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்களை வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் தொற்று ஊரடங்கு காலத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாதத்திற்கு 3கிலோ சத்துமாவு வழங்க ஆணையிட்டு தற்போது வாணியம்பாடி பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது. நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உடலில் சத்துகுறைபாடுகளை களைந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு வழங்கியுள்ள இந்த திட்டத்தை பயன்படுத்தி பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் கோமதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சதாசிவம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சக்திசுபாஷினி, சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பசுமதி, நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், முன்னாள் ஆலங்காயம் பேரூராட்சி துணைத்தலைவர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.