தற்போதைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பாராட்டு

மதுரை

அனைத்து துறை ஊழியர்களும் தன்னலம் பாராது பணியாற்றியதன் மூலமாக மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு அறிவித்த, ஊரக உள்ளாட்சித்துறை அமைப்புகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் முதலமைச்சர் ஆய்வு பணிகளை மிகச்சிறப்பாக செய்து வருகின்றார். கொரேனா வைரஸ் தொற்று உலகெங்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிற இச்சூழ்நிலையை எதிர்கொண்டு முதலமைச்சரும் மற்றும் அமைச்சர் பெருமக்களும் மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளும், அவற்றுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் நாம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தபோது முதலமைச்சர் அறிவுரைப்படி மாவட்ட ஆட்சித்தலைவர் , மாநகராட்சி ஆணையாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து துறை ஊழியர்களும் தன்னலம் பாராது பணியாற்றியதன் மூலமாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மேற்கொண்ட குடிமராமத்து பணிகளின் காரணமாக நீர் நிலைகள் ஆழப்படுத்தப்பட்டு, மழைக்காலங்களில் அதிக அளவு நீரை தேக்கி வைக்க முடிகிறது. இத்திட்டம் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் 2,20,000 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 67000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சிறப்பு கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரியங்கா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் மதுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.