ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி ரயில் சோதனை ஓட்டம் – ப.ரவீந்திரநாத் எம்.பி. தகவல்

தேனி
ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை 31-ந்தேதி விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று ப.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை- போடி வரையிலான ரயில்வே திட்ட பணிகளில் நிறைவடைந்த மதுரை- தேனி வரையிலான பகுதிகள் ரயில்வே பாதுகாப்பு குழுவினரால் வரும் 31-ந் தேதி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்தரநாத் தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளையும், மின் தொடரமைப்பு கழகத்தின் உயர்மின் கோபுர வழித்தட மாற்று பணியினையும் ஆய்வு செய்தார். பின்னர் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் மேனேஜ்மென்ட் மானிட்டரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் ப.ரவீந்திரநாத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வரும் 31-ந்தேதி ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பின்னர் ரயில்வே பணிகளுக்கு இடையூறாக இருக்கும் உயர்மின் கோபுரம் மாற்றி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த உடன் பயணிகள் ரயில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ரயில்வே கூடுதல் நிர்வாக பொறியாளர் சரவணன், முதன்மை மின் பொறியாளர் ராஜன், மின் தொடரமைப்பு கழக உதவி இயக்குனர் வெங்கடேஷ்வரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி நகர துணை செயலாளர் ரெங்கநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர், மாவட்ட மீனவரணி செயலாளர் வைகைகருப்பு மற்றும் பலர் உடனிருந்தனர்.