மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி – புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜன. 28-
27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரியில் 15 சதவிகித மத்திய அரசுக்கான இடஒதுக்கீட்டில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் முந்தைய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் கோரிக்கை கொண்டு வந்தனர்.
இது சம்பந்தமாக கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது அந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு கழகத்தின் கோரிக்கையை ஏற்று மருத்துவம் சார்ந்த அகில இந்த இடங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என மத்திய அரசு அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கழகத்தின் கோரிக்கையின்படி மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அரசாணை செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் மருத்துவக்கல்ல்லூரிகளில் மத்திய அரசுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீடு பெற்றதற்கு கழகத்தின் தொடர் நடவடிக்கையே காரணமாகும்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க சமீபகாலமாக அகில இந்திய இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் தங்களால் தான் கிடைக்கப்பெற்றது என தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது பொய் வன்மையால் மக்களை திசை திருப்புகிறார்.
தனது பொய்யால் தமிழக மக்களை மட்டுமே ஏமாற்றிய தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இணையவழி கருத்தரங்கின் மூலம் வழக்கம்போல் உண்மையை மூடிமறைத்து 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதில் தி.மு.க.வுக்கு முழு பங்கு இருப்பதாக மற்ற மாநில மக்களையும் நம்ப முயற்சி மேற்கொண்டுள்ளதை புதுச்சேரிகழகம்
வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழகத்த்தில் தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடத்தை வழங்க அதற்கான சட்ட அறிவிப்பினை வெளியிடவில்லை? இவையெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய சமூக நீதியை பெறமுடியாமல் தடுப்பது இல்லையா?
தான் ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே உள்ளாட்சி தேர்தலில் உரிய இட ஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்காத திராவிட முன்னேற்ற கழகம் அகில இந்திய அளவில் கழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தங்களால் தான் கிடைத்தது என வாய் கூசாமல் பொய் பேசுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.