தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் கழகத்திற்கு பிரகாசமான வெற்றிவாய்ப்பு உருவாகியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே கழக நிர்வாகிகள் விருப்பு வெறுப்பு இன்றி செயல்பட்டால் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளை கைப்பற்றி விடலாம். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மட்டுமல்ல, திண்டுக்கல் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை எளிதில் கைப்பற்றி விடலாம். அதற்கு நாம் கண் துஞ்சாமல் பாடுபட்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.