தற்போதைய செய்திகள்

அரசு திட்ட பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு – பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி மீது கழகம் புகார்

திருவள்ளூர்,

அரசு திட்ட பணிகளை வழங்காமல் புறக்கணிப்பதாக பூண்டி வட்டார வளரச்சி அதிகாரி மீது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியக்குழு தலைவராக கழகத்தை சேர்ந்த வெங்கட்டரமணா என்பவர் உள்ளார். துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட இளைஞரணி துணைத்தலைவராக உள்ள மோதிலால் என்பவரின் மனைவி மகாலட்சுமி என்பவர் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் திட்ட பணிகளான மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கழகத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களுக்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கோ வழங்காமல் வட்டார வளர்ச்சி அலுவலர் தவிர்த்து வருவதாகவும்,

தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு துணைத்தலைவரின் கணவர் மோதிலால் மற்றும் அவரது சகோதரரும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கிறிஸ்டி ஆகியோர் சொல்லும் நபர்களுக்கு மட்டுமே அரசின் திட்ட பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் மற்றும் பூண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் பிரசாத், கந்தசாமி மற்றும் கழக ஒன்றிய கவுன்சிலர் விஜி உள்ளிட்ட கழகத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் வருகிற 31-ந் தேதி பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவள்ளூர் மேற்கு மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தெரிவித்தார்.