சிறப்பு செய்திகள்

சரியான நடவடிக்கையால் நாமக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பேட்டி

சென்னை

சரியான நடவடிக்கையால் நாமக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகளவில் பரவி வரும் இந்தப் புதிய நோய்த் தொற்று, இந்தியாவிலும் தமிழகத்திலும் பரவியுள்ளது. 2020 மார்ச் மாத இறுதி முதல் இன்று வரை இந்த நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து குணமடைய செய்கின்ற பணியை நம்முடைய மருத்துவர்கள் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.

20.8.2020 வரை தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3,66,435 நபர்கள். நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 1,411 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 1,008 நபர்கள். 20.8.2020 அன்று மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 46 நபர்கள். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 30 நபர்கள். தற்போது கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் 378 நபர்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற மொத்தப் பரிசோதனைகள் 40,032. 20.8.2020 அன்று மட்டும் நடைபெற்ற பரிசோதனைகளின் எண்ணிக்கை 540. நாமக்கல் மாவட்டத்தில் 3 பரிசோதனை நிலையங்கள் இருக்கிறன. அரசு மருத்துவமனையில் 9 இடங்களில் 434 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனையில் 15 இடங்களில் 255 படுக்கை வசதிகளும் உள்ளன. கோவிட் கேர் சென்டர் 4 அரசுக் கட்டடங்களில்

162 படுக்கை வசதிகளுடனும், 2 தனியார் கட்டடங்களில் 20 படுக்கை வசதிகளுடனும் உள்ளன. கோவிட் கேர் சென்டருக்கு தனியார் கட்டடங்களில் 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.

நாமக்கல் மாவட்டம் லாரி மற்றும் ரிக் தொழில்கள் அதிகமுள்ள மாவட்டம். முட்டை உற்பத்தியில் முன்னோடியாக விளங்குகின்ற மாவட்டம். இதனால் இம்மாவட்ட தொழிலாளர்களுக்கு வெளிமாநிலத் தொடர்புகள் அதிகம். இருந்தாலும், வெளிமாநிலங்களுக்குச் சென்று வருபவர்களில் இந்நோய்த் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் 1,411 நபர்கள்தான். இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு மாவட்டம் முழுவதும் 1,819 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 56,278 நபர்களை பரிசோதித்ததில், தொற்று அறிகுறிகள் இல்லாத 143 நபர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக நோய்த் தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 24,047 மனுக்கள் பெறப்பட்டு, அதில், தகுதி வாய்ந்த 14,148 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் சுமார் 23.29 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9,318 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் இந்த மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்றாண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் 68 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்காக ரூபாய் 15.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2020-21ம் ஆண்டிற்கு 19 பணிகளுக்கு ரூபாய் 8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் இரண்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன, 17 பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.