தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்பீர் – தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள்

நாமக்கல்

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர தகவல் தொழில் நுட்பப் பிரிவின் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குமாரபாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

குமாரபாளையம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைத்த பெருமை கழக அரசுக்கு உண்டு. ஆனால் திமுக இதுபோன்ற உதவிகளை செய்யவில்லை.அதேபோல குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு செயல்படும். அதுவரை எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்காலிக தாலுகா அலுவலகம் அமைத்து, முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் 2016 தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் தாலுகா அலுவலகம் பள்ளிபாளையத்திற்கு செல்லும் என கூறினார். ஆனால் அவரது கட்சியினர் குமாரபாளையத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என சொன்னார்கள். இதிலேயே அவர்களின் இரட்டைவேடம் தெரிந்தது.

இப்பகுதியில் அதிக நூல் உற்பத்தி ஆலைகள் இருப்பதால் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக தமிழகத்திலேயே எந்த தாலுகாவிலும் இல்லாத சரித்திரமாக 2 தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொண்டு வந்தது கழக ஆட்சித்தான். குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதியில் சாய ஆலை தொழில் நடப்பதால் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்காமல் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எண்ணற்ற திட்டங்களை அரசு அனைத்து தொகுதிகளுக்கும் செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுகவினர் பொய் பிரச்சாரத்தை எளிதாக மக்களிடம் திமுகவினர் கொண்டு சென்று விடுகின்றனர்.

தமிழக அரசு கொரோனா காலத்தில் வருவாய் இழப்பு இருந்தபோதிலும் கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கியது. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கழக அரசின் சாதனைகளை தொழில்நுட்ப பிரிவினர் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்காக சமூக ஊடகங்களில் நன்கு செயல்பட வேண்டும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருந்து கடமை ஆற்றுவோம்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக மாநில அரசு செயல்படுத்தி வருவதை தகவல் தொழில்நுட்ப பிரிவு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் எப்படி சிறப்பாக தன்னார்வ பணிகளை மேற்கொண்டு இருந்ததோ அதேபோல பின்வரும் மூன்று மாதங்களுக்கு அரசின் திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது இளைஞர்கள் நினைத்தால் நடக்காத காரியம் எதுவுமே கிடையாது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெரிவித்தது போல இன்னும் 100 ஆண்டுகள் கழகம் திறம்பட செயல்பட்டு ஆட்சி நடத்தும். சமூக ஊடகங்கள் இன்று வளர்ந்து வருவதால் அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் முழுவீச்சில் கொண்டு செல்கிறது. இதன்மூலம் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூறும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியை வலுப்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவு சிறப்பாக பணியாற்றி வருகிறது.

சாதாரண ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பரம்பரையாக வந்து ஆட்சி செய்பவர்கள் இல்லை. முதலமைச்சர் ஒரு சாமானியனாக இருந்து கொண்டு அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை கூறி வருகின்றனர். அதனை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் சமீபத்தில் பள்ளிபாளையத்தில் ஒரு பெண்ணுக்கு செல்போன் வழியாக மின்சாரம் பாய்ந்து கை பாதிக்கப்பட்டு விட்டது வீட்டின் மொட்டை மாடியில் உயர் அழுத்தம் அருகே செல்லும் போது அந்த பெண் செல்போன் பேசிக்கொண்டு இருந்ததால் அதன் வழியே மின்சாரம் பாய்ந்து அந்த பெண்ணின் கை பாதிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதில் திமுகவினர் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அதனை தகவல் தொழிநுட்ப பிரிவினர் தக்க பதிலடி கொடுத்து முறியடித்துள்ளனர். இந்த இயக்கத்தை நம்பி வந்தவர்களை நாங்கள் பாதுகாப்போம் கைவிட மாட்டோம்

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான எஸ்.செந்தில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.சந்திரசேகரன், பள்ளிபாளையம் நகர கழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான பி.எஸ்.வெள்ளியங்கிரி, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும், நகர பேரவை செயலாளருமான டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ் தலைவர் திருமூர்த்தி, குமாரபாளையம் தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு மதுரை மண்டல இணை செயலாளர் நல்லகுமார், மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் எஸ்.எஸ்.எம்.புருஷோத்தமன், குமாரபாளையம் நகர கழக செயலாளர் சிங்காரம், தகவல் தொழில் நுட்ப அணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.