சிறப்பு செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா முதலமைச்சர், துணை முதலமைச்சர் எளிமையான வழிபாடு

சென்னை

தமிழகத்தை பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி விழா எப்போதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் அவரவர் இல்லங்களில் கொண்டாடுங்கள். விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் கரைப்புக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் மக்கள் அவரவர் வீடுகளில் விநாயகரை அலங்கரித்து வைத்து கொழுக்கட்டை, பழங்கள், அருகம்புல் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து தீபாராதனை காட்டி வழிபட்டனர். கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூகஇடைவெளியை பின்பற்றியும் விநாயகரை தரிசனம் செய்தனர்.

பெரும்பாலான கோயில்களில் கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்களை விநாயகருக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆரவாரமின்றி கொண்டாடப்படவில்லை என்றாலும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியை பின்பற்றி விநாயகருக்கு வழிபாடு செய்தனர்.

பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். விநாயகருக்கு பூஜை பொருட்களை படைத்தும், தீபாராதனை காட்டியும் சிறப்பு பூஜை செய்து விநாயகரை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழிபட்டார்.

இதேபோல் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து மக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடிய விதம், கழக அரசுக்கு ஆதரவை கொடுத்து உள்ளனர் என்பதையே காட்டுகிறது.