தமிழகம்

ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு நினைவுப்பரிசு வழங்கி முதலமைச்சர் பாராட்டு

சென்னை

ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு நினைவுப்பரிசு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், 2019-ம் ஆண்டு இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மு.பூரணசுந்தரி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த டி.பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் க.சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் சா.விஜயராஜ் குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.