மற்றவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேற்று தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இத்தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆசியுடன் கழகம் மகத்தான வெற்றி பெறும். 8 மாத தி.மு.க. ஆட்சியால் அவதிப்படும் மக்கள் வெற்றியை எங்களுக்கு பரிசாக தருவார்கள்.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை பெற்ற ஒரே கட்சி தி.மு.க. தான். பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக சிக்குவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.