தற்போதைய செய்திகள்

கூட்டுறவு வங்கியில் யார் தவறு செய்தாலும் தப்பிக்க முடியாது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எச்சரிக்கை

மதுரை

கூட்டுறவு வங்கியில் யார் ஊழல் செய்தாலும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளையும் துறை சார்ந்த அதிகாரிகள் தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுக்கின்றனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் மாவட்ட கூட்டுறவுத்துறையின் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. கூட்டுறவுத்துறையில் 1853 சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஆன்லைன் சேவை துவங்க உள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு நலனுக்காக சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை 2016ல் 26,000 கோடி ரூபாய் வைப்புத்தொகை இருந்தது. தற்போது 58 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நிதி உதவியாக 103 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஊராட்சி மன்ற தலைவரை இந்த அரசு மதிக்கவில்லை என்று சொல்லுங்கள். அதிமுக அரசைப் பொறுத்தவரை எம்மதமும் சம்மதம். அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஜாதியை கட்சிக்குள் ஒழித்தவர் எம்ஜிஆர் மட்டுமே.

கூட்டுறவு வங்கியில் யார் ஊழல் செய்தாலும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளையும், துறை சார்ந்த அதிகாரிகள் தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே நீதிமன்றத்தை நாடிய ஒரே அரசு தமிழக அரசு மட்டும் தான்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.