தற்போதைய செய்திகள்

சீர்காழியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் -விடியா தி.மு.க. அரசில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்

பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சீர்காழியில் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் விடியா தி.மு.க. அரசில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கே அப்பகுதிகளை சேர்ந்த சுமார் 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அக்கடையில் தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு இதுநாள் வரை முழுமையாக வழங்கப்படவில்லை.

மேலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட பல குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு அறிவித்தபடி 21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. அதிலும் பல பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இதுஒருபுறமிருக்க தங்களுக்கு வழங்கக்கூடிய அரிசியும் தரமற்றதாக இருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுகுறித்து நியாயம் கேட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் மரியாதை குறைவான வார்த்தைகளால் திட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கூறிய பொதுமக்கள், பயோ மெட்ரிக் சரிவர இயங்காதால் நீண்டநேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டியதிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் அரிசி தரமற்றதாக வழங்கப்படுகிறது என்றும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி போலீசார் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் உரிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்கிறோம் என்றும் தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த முற்றுகை போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.