தற்போதைய செய்திகள்

கழக ஊராட்சி தலைவர் குடும்பத்தினர் மீது தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் – படுகாயமடைந்தவர்களுக்கு, மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கடுகனூர் கிராமத்தில் வீடு புகுந்து கழக ஊராட்சி மன்ற தலைவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்தவர்களை மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கடுகனூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக கழகத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த ஆறுமுகம் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் ஆறுமுகம், சரவணன், சேகர் உள்ளிட்ட தி.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்ட குண்டர்களுடன் நேற்று முன்தினம் தடி மற்றும் ஆயுதங்களுடன் கழக ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார், அவரது மனைவி விமலா மற்றும் உறவினர்களான உஷா, இசாஸ்ஸ்ரீ ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தி.மு.க.வினர் தப்பிஓடி விட்டனர். தி.மு.க.வை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் தொண்டர்கள் வீடு புகுந்து கழக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய காட்சிகள் ஊராட்சித்தலைவர் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார், அவரது மனைவி விமலா, உறவினர் உஷா ஆகியோர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கழக நிர்வாகிகளுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தி.மு.க குண்டர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன், மகேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.