தற்போதைய செய்திகள்

கழிவு நீர் அடைப்புகளை அகற்ற 7 நவீன வாகனங்கள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

கழிவுநீர் அடைப்புகளை அகற்ற சென்னையில் 7 நவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் புதிதாக வாங்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாகனம் மூலமாகக் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

மழைக்காலங்களில் கழிவு நீர் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை எடுக்க நவீன கழிவு நீர் அடைப்பு நீக்கம் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. கால்வாயில் அடைப்புகளை நீக்கும் 3 பயன்பாடுகள் இந்த ஒரு வாகனத்தில் உள்ளது. மழைக் காலங்களில் மழைநீர் கால்வாய் அடைப்பு இல்லாமல் இருந்தால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும். சென்னையில் 2236 கிலோ மீட்டர் தொலைவில் மழைநீர் கால்வாய் உள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 138 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் உள்ளது. சக்சன், ஜெட்ராடிங், ரிசைக்கிளிங் போன்ற 3 பணிகளை ஒரே வாகனத்தை வைத்துச் செய்யும் வசதிக்காக இந்த வாகனம் ரூ.5 கோடியே 19 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு இதுபோல் 7 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரத்தின் பயன்பாட்டால் மனிதர்கள் கால்வாயில் இறங்கி பணியாற்றும் நிலை இனி இருக்காது.

காலத்தின் தேவைக்கேற்ப 2 வது தலைநகரம் குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனா பரிசோதனை, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள், குறைவான இறப்பு விகிதம் உலகளவில் ஒப்பிடும்போது தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. எனவே இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. முககவசம், கை கழுவுதல் போன்ற அரசு வழிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா பரவலைத் தடுக்கலாம். இந்தியா கட்டமைப்பில் தமிழகம் உள்ளது. தமிழர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ளனர்.

நாம் ஒரு கொள்கை படியே செயல்பட்டு வருகிறோம். வேலை வாய்ப்பை பொறுத்தவரைக் கொள்கை படியே செயல்பட்டு வருகிறோம். சென்னை திரும்புவார்கள். மருத்துவத் துறை கூறும் வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.கொரோனா பரவலில் சங்கிலித் தொடர் இல்லாத நிலை தமிழகத்தில் இருப்பதால் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தான்தோன்றித் தனமாகச் செய்ய முடியாது. வல்லுநர்களின் அறிவுரைக்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

பட்டியலின மக்களுக்கு அரசு பல நல்ல திட்டங்களைச் செய்து வருகிறது. மேலும் அவர்கள் பாதுகாப்புடன் வாழ அரசு வழிவகை செய்து வருகிறது. பட்டியலின மக்கள் மீது அவதூறு செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் மாயமான விவகாரத்தில் மீனவர்களின் குடும்பத்தாருக்கு அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.