தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என செயல்படுபவர் முதலமைச்சர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. பொருளாளர் ஜே.டி.ஹரிராம், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் ஜே.என்.ஜெயகீதா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி கழக மாணவர் அணி இணை செயலாளர் பா.குமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று புரட்சித்தலைவி அம்மா தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க.வை எடுத்துக்கொண்டால் தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என்று ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்

அதுமட்டுமல்லாது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க.வினர் அளித்தனர். அதில் எதையும் நிறைவேற்றவில்லை அதேபோல் சட்டமன்ற தேர்தலின் போதும் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். அதில் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது

குறிப்பாக மதுரை மாநகராட்சியில் அதிகளவில் திட்டங்களை நிறைவேற்றிய அரசு என்றால் ஒட்டுமொத்த மக்களும் கூறுவார்கள் அது அம்மாவின் அரசு என்று. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போது பத்து ஆண்டுகளில் அம்மா அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறுவோம்.

மதுரை மாநகராட்சியை கழகம் கைப்பற்றும். இன்றைக்கு நம் இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கழகத்தில் இணைந்து வருகின்றனர். கழகத்தில் மீண்டும் இணைந்த நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கழகம் ஏற்படுத்தி தரும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.