தற்போதைய செய்திகள்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைப்போம்-இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி சூளுரை

செங்கல்பட்டு

வரும் உள்ளாட்சித்தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைப்போம் என்று இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி சூளுரைத்தார்.

சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மேடவாக்கத்தில், கழக அம்மா பேரவை துணை செயலாளரும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏதோ மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக தி.மு.க.வினர் கனவில் மிதக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வினரின் பித்தலாட்டங்களை மக்கள் உணர தொடங்கி விட்டார்கள். எனவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க நாம் தயாராக வேண்டும். அதற்கு உங்களில் ஒருவரை மக்களிடம் நன்கு அறிமுகமான, நன்கு செயல்படக்கூடியவரை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

நம்மிடையே போட்டி இருக்கக்கூடாது. அவ்வாறு ஏதேனும் இருந்தால் அது நம்மை எதிர்த்து போட்டியிடுபவருக்கு சாதகமாக அமைந்து விடும். எனவே நாம் ஒற்றுமையாக இருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை நாம் மனதில் நிலைநிறுத்தி, வருகின்ற உள்ளாட்சித்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றிட கடுமையாக உழைப்போம்.

இவ்வாறு கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பேசினார்.