கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 134 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ.திரவம் வழங்கும் முகாம் – சுகாதார துணை இயக்குநர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் 134 – குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ. திரவம் வழங்கும் முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் நேற்று துவக்கி வைத்தார்.

பின்பு சுகாதார பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் தெரிவித்ததாவது:-

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3,129- குழந்தைகளுக்கு ஏ.வைட்டமின் திரவம் வழங்கும் முகாம் துவக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் 6 மாத குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்கப்படுகிறது 1,796 அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையம் 268 மையங்களில் 2, 611 பணியாளர்கள் மூலம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 857 குழந்தைகளுக்கு ஏ வைட்டமின் திரவம் வழங்கும் பணி நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் திட்டமிட்ட அட்டவணைப்படி இன்று முதல் வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இந்த முகாம்கள் நடைபெறும். நேற்று முதல் வரும் 5.9.2020 வரை இந்த முகாம் நடைபெறும். எனவே பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஏ வைட்டமின் திரவம் போட்டுக்கொள்ளவும்.

இவ்வாறு துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் வி.கோவிந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுசித்ரா, மருத்துவ அலுவலர் டாக்டர் இனியாள் மண்டோதரி, கிருஷ்ணகிரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.