தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதி – சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் திட்டவட்டம்

செங்கல்பட்டு

இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 192-வது வட்டம் நீலாங்கரையில் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பி.எஸ்.ராஜன் ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். கழக அரசின் திட்டங்கள், சாதனைகளை நினைத்து மக்கள் பாராட்டுகின்றனர். ஏன் தி.மு.க.விற்கு வாக்களித்தோம் என்று அனைத்து தரப்பு மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது. தி.மு.க.வின் எத்தகைய பொய் வாக்குறுதிகளையும் மக்கள் இனி நம்ப மாட்டார்கள். தெளிவாக இருக்கிறார்கள். ஆகவே நாம் ஒன்றிணைந்து செயல்பாட்டாலே போதும் கழகத்தின் வெற்றி உறுதி.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.கந்தன் பேசினார்.

இக்கூட்டத்தில் பகுதி கழக செயலாளர் டி.சி.கருணா, வட்ட கழக செயலாளர் எஸ்.மாசிலாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.