சிறப்பு செய்திகள்

2 அரசு இசைக்கல்லூரிகளில் ரூ.1.70 கோடி மதிப்பில் புதிய கட்டடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

2018-19-ம் ஆண்டிற்கான கலை பண்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், மதுரை, பசுமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி நலன் மற்றும் இடவசதியினை கருத்தில் கொண்டு மதுரை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மண்டலக்கலை பண்பாட்டு மையத்திற்கு கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், பசுமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிக்கு 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 வகுப்பறைகள், கல்லூரி முதல்வர் அறை, அலுவலக அறை மற்றும் இசைக்கருவிகள் வைப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கி கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், தொல்லியல் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் வ.கலைஅரசி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.