புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு – முதலமைச்சருக்கு, கழகம் வலியுறுத்தல்

புதுச்சேரி
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் மருத்துவக்கல்வியில் சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் முதலமைச்சர் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மருத்துவம் சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை தங்களது ஆட்சியின் போது சென்டாக் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசே செலுத்தும் உன்னத திட்டத்தை தாங்கள் முதல்வராக இருந்த போது கொண்டு வந்தீர்கள். அதன் மூலம் ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய கட்டணமாக சுமார் ரூ.30 கோடியை அரசே செலுத்துகிறது.
அரசின் நிதி உதவியின் மூலம் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்டோர் முழுமையாக மருத்துவக்கல்வியை படித்து முடித்து வெளியில் வருகிறார்கள். அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மக்கள் வரிப்பணத்தின் மூலம் மருத்துவர்களாக புதுச்சேரி அரசு உருவாக்கி வந்துள்ளது.
அரசின் உதவி மூலம் இலவச மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது மருத்துவக்கல்வியை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புறத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் விதத்தில் பல மாநிலங்களில் மருத்துவக்கல்வியில் சேரும் போதே மாணவர்களிடம் தனி ஒப்பந்தம் அரசு சார்பில் போடப்படும். அதுபோன்று எந்த உறுதிமொழியும் புதுச்சேரியில் இல்லாததால் அரசு மூலம் இலவசமாக மருத்துவக்கல்வி முடித்தவர்கள் குறைந்த பட்சம் இந்த கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முன்வருவதில்லை.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு கிராமப்புறத்தில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. ஆண்டுக்கு ரூ.30 கோடிக்கு மேல் மக்களின் வரிப்பணத்தால் இலவச மருத்துவக்கல்வி பயில வாய்ப்பு அளிக்கும் அரசு மருத்துவக்கல்வியை முடித்தவுடன் கட்டாயம் ஓராண்டு மக்களுக்கு கிராமப்புறங்களில் அரசு நிர்ணயிக்கும் சம்பளத்திற்கு மருத்துவ பணியாற்ற வேண்டும் என தாங்கள் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.
அதேபோன்று சென்டாக் மூலம் எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் போதிய வசதியில்லாததால் மருத்துவ உயர்கல்வி பயில முடியாமல் முடங்கி வருகிறார்கள். எனவே ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவம் உயர்கல்வி பயில கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை அரசு செலுத்த முன்வர வேண்டும்.
அவ்வாறு அரசு மூலம் மருத்துவ உயர்கல்வி எம்டி,எம்எஸ் போன்ற படிப்பு முடித்தவர்கள், தங்களது படிப்பு முடித்தவுடன் குறைந்தது இரண்டு ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் தங்களது மருத்துவ பணியை அரசு நிர்ணயம் செய்யும் சம்பளத்தில் பணி செய்ய முன்வர தகுந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ளது போன்று ஒப்பந்தம் போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மருத்துவக்கல்வி இருந்தது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சீரிய முயற்சியால் மருத்துவக்கல்வியில் அரசு இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சட்டரீதியாக பெற்று தந்தனர். அதனடிப்படையில் இன்று 500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்வி பயிலும் உரிமையை தமிழகத்தில் பெற்றுள்ளனர்.
தமிழகம் போன்று புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவருக்கு அரசின் மருத்துவ இடஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் என கடந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கழகம் சார்பிலும், தனித்தும், கழகம், என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய நமது கூட்டணி கட்சிகள் இணைந்து பல கட்ட போராட்டங்களை சட்டமன்றத்தில் நடத்தி உள்ளோம்.
புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்வி நிறுவனங்களில் அரசின் இடஒதுக்கீடாக உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் போன்று 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால் ஆண்டு தோறும் அரசு பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி பயில வாய்ப்பளித்திருக்கலாம்.
தற்போது புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக செயல்படும் தாங்கள் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து தமிழகத்தை பின்பற்றி மருத்துவக்கல்வியில் அரசு ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.