வாழப்பாடியில் 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி-சேலம் மாவட்ட ஆட்சியரிடம், கு.சித்ரா எம்.எல்.ஏ புகார்

சேலம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சியில் உள்ள 2 வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ளான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் உள்ள 11 மற்றும் 12-வது வார்டு வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஏற்காடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 11-வது வார்டில் உள்ள 315 வாக்காளர்கள் 12-வது வார்டிலும், 12-வது வார்டில் உள்ள 385 வாக்காளர்கள், 11-வது வார்டிலும் மாற்றப்பட்டுள்ளதாகவும், ஒரே வீட்டில் வசிப்பவர்கள் வெவ்வேறு வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள கழக எம்.எல்.ஏ. கு.சித்ரா இந்த குளறுபடி குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வின் போது வாழப்பாடி பேரூர் கழக செயலாளர் சிவகுமார், பேரூர் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், பேரூர் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராமச்சந்திரன், கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.